பாயிரம்
ஆக்கியோன் பெயரே வழியே எல்லைநூல்: நன்னூல் (#47)
நூல்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோடு ஆய் எண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே
பாடியவர்: பவணந்தி முனிவர்
நூல்களின் தொடக்கத்தில் ‘பாயிரம்’ என்று ஓர் அறிமுகப் பாடலை எழுதுவார்கள். அதில் கீழ்காணும் விஷயங்கள் தெளிவாகச் சொல்லப்படவேண்டும்:துக்கடா
1. ஆக்கியோன் பெயர், அதாவது இந்த நூலை எழுதியவர் பெயர் என்ன?
2. வழி, அதாவது இந்த நூல் வேறு ஒரு நூலின் அடிப்படையில், அல்லது அதனைத் தழுவி எழுதப்பட்டதா? ஆம் எனில், அந்த முதல்நூலின் பெயர். இல்லை எனில், ‘இதுவே முதல்நூல்’ என்று குறிப்பிடவேண்டும் (உதாரணம்: கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது)
3. எல்லை, இந்த நூலின் கதை / அதில் வரும் சம்பவங்கள் எங்கே நடக்கிறது? எந்த எல்லைகளுக்குள்?
4. நூற்பெயர், புத்தகத்தின் தலைப்பு என்ன?
5. யாப்பு, எந்த இலக்கணத்தின் அடிப்படையில் இந்த நூலில் உள்ள பாடல்கள் எழுதப்பட்டுள்ளன?
6. நுதலிய பொருள், இந்த நூல் சொல்லும் மையப்பொருள் என்ன?
7. கேட்போர், இந்த நூல் அரங்கேற்றப்பட்டபோது அதனைக் கேட்ட பெரியவர்கள் யார் யார்? (அதாவது, அவர்களால் இந்த நூல் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பொருள்)
8. பயன், இந்த நூலைப் படித்தால் அதன்மூலம் என்ன பயன் கிடைக்கும்?
- என்ன அழகான இலக்கணம்! இத்தனை தெளிவான அறிமுகம் இருந்தால், பாயிரத்தைப் படித்தவுடன் அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்கலாமா வேண்டாமா என்று தீர்மானித்துவிடமுடியும் அல்லவா?
- இந்தக் காலப் புத்தகங்களுக்கும் இந்த இலக்கணம் பொருந்துகிறதா என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்:
- ஆசிரியர் பெயர், நூலின் பெயர் : அட்டையில், பக்கத்துக்குப் பக்கம் குறிப்பிடுகிறார்கள்
- வழி : ’சுட்ட பழம்’ என்றால் பெரும்பாலும் சொல்வதில்லை
- எல்லை: பெரும்பாலும் சொல்வதில்லை
- யாப்பு: சான்ஸே இல்லை
- நுதலிய பொருள், பயன்: பெரும்பாலான புத்தகங்களின் பின் அட்டைகளில் சொல்லப்படுகிறது (blurb)
- கேட்போர்: அதே பின் அட்டையில் சிறு விமர்சனங்களாகக் குறிப்பிடப்படுகிறது (பிரபலங்களின் பாராட்டுகள்)
- இவைதவிர, இப்போது புதிதாகச் சேர்ந்துகொண்டிருக்கும் விஷயங்கள், பதிப்பகத்தின் பெயர், விலை, பதிப்புரிமை, முன்னுரை, பதிப்புரை, மதிப்புரை, இன்னபிற உரைகள், ஆசிரியரின் புகைப்படம் / வாழ்க்கைக் குறிப்பு / அவர் எழுதிய வேறு புத்தகங்கள் / முகவரி / ஃபோன் நபர் / ஈமெயில், (வெற்றிபெற்ற புத்தகம் எனில்) இந்தப் புத்தகம் இதுவரை எத்தனை பிரதிகள் விற்பனையாகியுள்ளது என்ற விவரம், இதே பதிப்பகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புத்தகங்களின் விளம்பரம்…
No comments:
Post a Comment