Monday, May 20, 2013

கிண்ணியாவில் தரமிழந்து போகும் ஐந்தாம் தர மாணவர்களின் நிலை!

ஒரு மாணவனின் பாடசாலை கால வாழ்க்கையில் மிகவும் செல்வாக்குச் செலுத்துவதும் அம்மாணவனின் எதிர்கால வாழ்க்கையினைத் தீர்மானிப்பதன் ஊடாக சீரிய திருப்புமுனையாக அமைவதுமான அரசாங்கத்தின் செயற்பாட்டுத்திட்டம் பரீட்சைகளே.

அரசாங்கத்தினால் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்படும் பரீட்சைகளாக

01.தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைˌ

02.கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைˌ

03.கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைˌ

என்பவற்றைக் குறிப்பிடலாம். முதலாவது எதிர் நோக்கும் அல்லது முதலாவதாக நடைபெறுகின்ற எந்தவொரு சம்பவமும் நிச்சயாமாக புதிய அனுபவத்தையும் வாழ்வில் மறக்கப்படாத ஒன்றாகவும் இதுவவரை கருதப்பட்டு வருவது நாம் அறிந்த விடயம். அந்தவகையில் நாம் தமது சின்னஞ் சிறு வயதில் பரீட்சை ஒன்றினை எதிர் கொள்ளும் இந்த சிறார்களைப் பற்றி சிந்திக்கத்தான் வேண்டும். பிஞ்சு உள்ளங்கள் முதலாவது தடவையாக எதிர்கொள்ளும் அந்த கன்னி பரீட்சை பற்றி கண்மூடித்தனமாய் இருந்து என்ன பயன்? சற்று அலசுவோம்.

தரம் ஐந்து மாணவர்களில் தனிப்பட்ட ஒரு மாணவரது அன்றாட வாழ்க்கைச் சுற்று வட்டத்தினை எடுத்துப் பார்க்கின்ற போது, காலை பாடசாலையில் தனது கண்ணை விழித்துப் பார்க்கும் அம்மாணவன் இரவு தானாகவே கண்ணயர்ந்து போகுமளவுக்கு பளு அதிகரித்துப் போவதைக் காணலாம். அது எப்படி என்றால் காலை பாடசாலை முடிந்ததன் பிற்பாடு மாணவர்கள் குர்ஆன் மத்ரஸாவுக்குச் செல்கிறார்கள் இல்லையேல் பின்னேர வகுப்புக்கள் எனும் பெயரில் படையெடுக்கிறார்கள்.அதன் பிறகு இரவு நேர வகுப்புக்களிலும் கலந்து கொள்ளும் மாணவர்கள் எட்டு அல்லது ஒன்பது மணியளவில் வீட்டுக்கு வந்து அனைத்து ஆசிரியர்களாலும் வழங்கப்பட்ட மேலதிகˌ வீட்டுவேலைப் பயிற்சிகளை செய்ததும் செய்யாததுமாக தூங்கி விடுகிறார்கள்.

எனவே இவ்வாறான நெரிசல்களில் இருந்து மாணவர்கள் திருப்பியெடுக்கப்படாவிட்டால் மாணவர்களின் துரித செயற்பாடுகள் அதிகரிப்பதற்கு மாறாக மாணவர்கள் அடிமட்டமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் எந்த ஐயப்பாடும் கிடையாது.

மாணவர்கள் இவ்வாறான நெரிசலுக்கு உட்பட காரணம் பெற்றோர்கள் மாணவர்கள் மீது காட்டும் அக்கறையும் சித்தியடைய வேண்டும் என்ற அவாவுமே முனைப்புப் பெறுகிறது. .ஆனால் பெற்றோர்களால் எடுக்கப்படும் இப்பிரயத்தனமானது மாணவர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடுகிறது என்பதை புரிந்து கொள்வதாக இல்லை.

பாடசாலைக் கலைத்திட்டத்தினைப் பொறுத்தவரையில் மாணவனொருவன் பொருத்தமான கல்வியினை சரியாகப் பெற்றுக் கொள்வதற்கேற்ற வகையில் பல அறிஞர்கள் ஒன்று கூடி

01.மாணவர்களின் வயதுˌ

02.அவர்களின் மனோ நிலைˌ

03.படிநிலை வளர்ச்சிˌ

போன்ற இன்னோரன்ன விடயங்களைக் கருத்திற் கெண்டு தமிழ்மொழிˌ சுற்றாடல் சார் செயற்பாடுகள்ˌகணிதம்ˌஆங்கிலம்ˌசமயம் போன்ற பாடங்களும் இதர செயற்பாடுகளும் அவர்களால் வடிவமைக்கப் பட்டுள்ளன.

இவ்வாறான பாடத்திட்டங்கள் யாவும் ஒழுங்கு முறையாக ஆசிரியர்களால் வழங்கப்படுகின்ற போது மாணவர்களின் படிமுறை வளர்ச்சியானது தானாகவே விருத்தியடைந்து செல்லும். இதனைத்தவிர்த்து பல வழிகளிலும் மாணவர்கள் திணிக்கப்படுகின்ற போது வளர்ச்சியில் பல தடங்கல்கள் ஏற்படும் என்பதில் ஐயம் கிடையாது.

இவ்வாறான நெரிசல் நிலையில் கல்வி கற்கும் சந்தர்ப்பத்தை எதிர் கொள்ளும் அனேக மாணவர்கள் பரீட்சையில் சித்தியெய்த தவறிவிடுகின்றார்கள்.வகுப்பறையில் சிறப்பாக செயற்பட்டு வீட்டில் தமது பெற்றோர்ˌ படித்தோர் துணையுடன் மீட்டல் மற்றும் வீட்டுவேலைப் பயிற்சிகளைச் செய்கின்ற மாணவர்கள் ஒரு சீராக சாதாரணமாகவே சித்தியெய்வதுடன் வகுப்பறைகளில் அவர்களே தமது வாழ்க்கைப் படிகளை இலகுவாக தாண்டிச் செல்வதனையும் அனுபவக் கண்கள் ஊடாக நாம் இன்று வரைக் கண்டு கொண்டிருக்கிறோம்.

சுயமாகப் படிக்கும் சந்தர்ப்பத்தினை மாணவர்ளுக்கு நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் 'பியாஜே' போன்ற அறிஞர்கள் சம அளவிலான ஓய்வுகள் மாணவர்களுக்கு வழங்கப்படாத பட்சத்தில் மாணவர்கள் அயர்வு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என தனது ஆய்வில் சுட்டிக் காட்டியிருந்தார். பின்னேர வகுப்புக்கள்ˌஇரவுநேர வகுப்புக்கள்ˌமத்ரஸா பாடங்கள்ˌபாடசாலை வீட்டு வேலைகள் போன்ற பல வேளைகளை ஒரே இரவில் இந்தச் சிறார்கள் செய்து முடிப்பார்கள் என்பது அசாதாரணமான விடயம். அம்மாணவச் செல்வங்களை ரோபோக்களாக மாற்றும் நடவடிக்கை இது.

மேலதிக வகுப்புக்களை நிராகரிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றாலும் மாணவர்கள் நெரிசல் படாதிருக்க அவற்றுக்கான மாற்றுத்திட்டங்களை மாற்று வழிகளைக் கொண்டு வரலாம் என்பதே இங்கு முனைப்பான விடயம். இதில் அதி முக்கியமாக பெற்றோர்கள் மாணவர்களின் நலன் தொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டிய தேவையுள்ளது. பெற்றோர்களின் சமயோசிதம் இவ்விடயத்தில் பயன்பாடுடையதாக இருக்க வேண்டும். மாணவர்களது பிஞ்சு உள்ளங்களில் சுமைகளை சுமக்க வைப்பது விழலுக்கு நீர் பாய்ச்சுவதான செயற்பாடாக மாறிவிடும்.

ஆகவேˌ செல்வங்களில் சிறந்த செல்வம் மாணவச் செல்வம் என்ற வாக்கிற்கேற்பˌ நாளும் கற்கும் மாணவ சமுதாயத்தினரின் நலனுக்காய் யாவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

இமாம்தீன்

ஆசிரியர், கிண்ணியா மத்திய கல்லூரி

No comments: